கிழக்கு வாசல் கடந்து ராஜகோபுரம் விடுத்து, அம்மன் வாசல் (amman gate) என்று அழைக்கப்படும் அஷ்ட சக்தி மண்டபத்தின் வாசலை வந்தடைகிறோம். இந்த வாயில் வழியாக நுழையும் நமக்கு அஷ்டசக்திகள் (எட்டு விதமான சக்தி வடிவங்கள்) மண்டபம் முதலில் தென்படுகிறது. இந்த மண்டபத்தின் சிற்பங்கள், அன்னை மீனாட்சியை எட்டு விதமான சக்திகள் உருவத்தில் காட்டுகிறது. எனவே இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது.

இந்த மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. இந்த மண்டபம் திருமலை நாயக்கர் மனைவி ருத்ரபதி அம்மாவால் கட்டப்பட்டது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு ஒரு காலத்தில் இந்த மண்டபத்தில்தான் உணவு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள மேல்மாடத்தில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவு படுத்துவதாக உள்ளன. மீனாட்சியின் பிறப்பு, அவளது வாழ்க்கை, மதுரையின் இளவரசியாவது என்ற சரித்திர சங்கதிகளை நினைவு படுத்தும் அந்த சிற்பங்கள் கோயிலுக்குள் நுழையும் முன் மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த மண்டபத்தின் வர்ண வேலைகள் அழகுக்கு அழகூட்டுகின்றன. அவற்றிற்கென உள்ள அழகை தூசுகள் அடைந்து மறைப்பது இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு அழகில்லை.

விநாயகர்.. Ganesa
இந்த மண்டபத்தின் வாயிலில் அன்னை மீனாட்சியின் புத்திரர்களான விநாயகர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் ஒரே கல்லிலான சிற்பங்களை நீங்கள் பார்க்கலாம். இந்தக் கோயிலின் அதிகமான இடங்களில் இவர்களைப் பார்க்க முடியும். இவர்களுள், விநாயகர் சிறு பாலகனாக, நான்கு கைகளுடனும், யானை முகத்துடனும், ஒரு தந்தத்துடனும், சிறிது தொப்பையுடனும் இருக்கிறார். அவருடைய வாகனமான மூஞ்சூறு அருகில் உள்ளது.

புராணக் கதையின் படி, விநாயகரை பார்வதி தேவி தன் உடலில் உள்ள பூசும் சந்தனத்தில் உருவாக்கி உயிர் கொடுத்ததாகவும்- அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நவகிரகங்களுள் ஒன்றான சனியிடம் ஒப்படைக்க-சனியின் உக்கிரப்பார்வையில் விநாயகர் தலை காணாமல் போக, படைப்புக் கடவுள் பிரம்மா யானையின் தலையை வைத்ததாக ஒரு கதை உண்டு. மாறாக, விநாயகரை உருவாக்கிய பார்வதி தேவி அவரைக் காவலுக்கு வைத்துவிட்டு குளிக்கப்போக-அந்த சமயத்தில் வந்த சிவனுக்கு அவர் அனுமதி மறுக்க-ஏற்பட்ட பிரச்சினையில் சிவன், விநாயகர் யாரென்று தெரியாமல் தலையை துண்டிக்க, பின்னர் பார்வதியின் கோபத்திற்கு பயந்து கையில் கிடைத்த யானையின் தலையை ஒட்ட வைத்ததாகவும் வரலாறு உண்டு. மனைவியின் கோபத்திற்கு பரம்பொருள் கூட விலக்கில்லை போலிருக்கிறது.
விநாயகரின் உடைந்த தந்தத்திற்கும் இரு வகையாக செவிவழிச் செய்திகள் உண்டு. கைலாயத்தில் காவலாய் விநாயகர் இருக்க-சத்திரியர்களை அழித்த பரசுராமர் சிவனைப் பார்க்க வரும்போது விநாயகர் குறுக்கிட்டு அனுமதி மறுக்க-கோபக்கார பரசுராமர் தன் கோடரியால் தாக்க முற்பட-தன் தந்தையால் பரசுராமருக்குக் கொடுக்கப்பட்ட கோடரியை எதிர்க்காமல் தன் ஒற்றைத்தந்தத்தில் வாங்கியதாக ஒரு கதை உண்டு. அது மட்டுமில்லாமல், வியாசர் மகாபாரதத்தைப் போதிக்க - காலம் கருதி தன் தந்தத்தை உடைத்து விநாயகர் எழுதியதாக மற்றொரு செய்தி உண்டு.
விநாயகரை பார்வதி உருவாக்கியது போல, சுப்பிரமணியரை சிவன் உருவாக்கினார். அவரது தீப்பொறியை கங்கை நீரில் சேர்க்க, அதில் உருவான குழந்தை சுப்பிரமணியன். அச்சிறு பாலகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்க்க, அவனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் உண்டானது. பனிரெண்டு கைகளும், ஆறு முகங்களுடனும் உடைய சுப்பிரமணியனை சமஸ்கிருதக் கவிஞர் காளிதாசர் தன் குமார சம்பவத்தில் முருகனின் அழகில் மயங்கி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
You don't have permission to comment on this page.