
வீரவசந்த மண்டபத்திற்கு இடதுபுறம் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் இந்தக் இடத்தின் சிறப்புகளுள் ஒன்று என்று சொல்லித்தான் ஆகவேண்டும். மற்ற மண்டபத்தில் இல்லாத சிறப்பான வேலைப்பாடுகள் ஆயிரங்கால் மண்டபத்தில் காணலாம். சுந்தரேசுவரர் சன்னதிக்குக் கிழக்கில் பெரிய இடப்பரப்பில் பல மண்டபங்கள் உள்ளன. வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் இரண்டும் இதில் பெரியவை.

ஆயிரம்கால் மண்டபத்தில் 985 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 73x76மீட்டர் கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தின் அழகை நம் எண்ணங்களால் மட்டுமே விவரிக்க முடியும். சொற்களால் அல்ல. மக்கள் கூட்டம் ஒரே சமயத்தில் வழிபாடு செய்ய இத்தகைய மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

கற்தூணில் செதுக்கப்பட்ட ஆண் பெண் தெய்வ மற்றும் மனித உருவங்கள் திராவிடச் சிற்பக்கலையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தச் சிலைகள் கருப்பு மார்பிளை ஒத்த கற்களில் செதுக்கப்பட்டு முடிந்தவரை மெருகேற்றப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் எங்கும் காணமுடியாத உணர்ச்சிகளை இந்த சிலைகளில் வடித்துள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவற்றில் சில சிற்பங்கள் நம் மக்களின் கைவண்ணத்தால் கை, கால், மூக்கினை இழந்திருந்தாலும் அதன் சிறப்பு குறையாமல் உள்ளது.
16ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் இவ்வாறு பெரிய தூண்கள் கொண்ட மண்டபத்தைக் கட்டுவதில் ஆர்வமுற்றிருந்தனர். அதனால் கல் உடைக்கவும் பெரிய தூண்கள் தடையில்லாமல் செய்யவும் தனியாகக் கூடங்களே தொடங்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
மண்டபத்தின் நுழைவாயிலில் புகழ் பெற்ற விசுவநாத நாயக்கரின் அமைச்சரான ஆரிய நாயக்கர் சிலை ஒன்று உள்ளது. அவரது பணிச்சிறப்புக்கு உதாரணமாக இந்த மண்டபம் உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலின் பழங்கால இடங்களுள் இதுவும் ஒன்று.
இந்நாளில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவிலின் கலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதில் 1200 கால தென்இந்திய கோயில் கட்டடக்கலையை விளக்கும் சிலைகள், புகைப்படங்கள், ஓவியங்களை வைத்துள்ளனர்.
Comments (0)
You don't have permission to comment on this page.