GrassField

 

தெப்பத்திருவிழா

Page history last edited by Pandian R 1 yr ago

தை (ஜனவரி-பிப்ரவரி) மாத பெளர்ணமி அன்று (தைப்பூசம்) வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. மலர்களாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் வலம் வருகின்றனர். கண்களுக்கு விருந்தான இந்தத் திருவிழா பட்டாசு வேடிக்கையால் நகரையே மயக்குகிறது.

தெப்பக்குளம் மதுரைக்கு தென்கிழக்கில் இருக்கிறது. 1,100x950 அடி அளவில் கிட்டத்தட்ட சதுர வடிவில் இந்தக் குளம் இருக்கிறது. 1636ல் கட்டப்பட்ட இந்தக் குளத்திற்கு 1646ல் திருமலை நாயக்கர் இந்தக் குளத்திற்கு கல்படியையும், நடுவில் ஒரு சிறிய, அழகான கோயிலையும் நிறுவியிருக்கிறார். அந்தக் கோயிலில் விக்னேஸ்வரர் வீற்றிருக்கிறார். திருமலை நாயக்கர் மஹால் கட்டும்போது, சில தேவைக்காக இங்கு தோண்டியபின், அந்தப் பள்ளம் தெப்பக்குளமாக மாற்றப்பட்டதாக குறிப்புகள் உணர்த்துகின்றன.

இந்த நாளில் மீனாட்சி, சுந்தரேசுவரரின் சிலைகள் மாரியம்மன் தெப்பக்குளக்கரைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு அலங்கரிக்கப்பட்ட ஒளிச் செரிவான தெப்பத்தில் அவை வைக்கப்பட்டு தெப்பக்குளத்தில் வலம் கொண்டு செல்லப்படுகின்றன. மேள, நாதஸ்வர இசைக்கு ஏற்றவாறு முன்னும் பின்னும் அசைந்தவாறு சுற்றிவரும் தெப்பத்தைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.

 

இந்தக் குளத்தில் வைகையிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டது. காலம் மாற வைகையும் ஏமாற்ற, மோட்டார்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் குழந்தைகள் ரயிலையும், படகுத்துறையையும் ஏற்படுத்தி பராமரித்து வருகிறது. பெரிய நாகலிங்க மரங்கள் நிறைந்த இந்த இடத்தில் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு உணவு விடுதி உள்ளது.

Comments (0)

You don't have permission to comment on this page.