GrassField

 

பொற்றாமரைக்குளம்

Page history last edited by Pandian R 1 yr ago

அந்த மண்படத்தைக் கடந்து தற்போது பொற்றாமரைக் குளத்தை அடைந்திருக்கிறோம். தெற்கு வாசல் பக்தர்களை நேரடியாக பொற்றாமரைக் குளத்திற்கு அழைத்து வருகிறது. அந்த நடைபாதையிலிருந்து படிகள் இறக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அந்தப் படிகள் உதவுகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்கள் நிறைந்த நடைபாதை உள்ளது. பொற்றாமரைக்குளம், மதுரை கோயில் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது. 40x60 மீட்டர்கள் அளவில் அமைந்துள்ள இந்தக்குளம் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பது சரித்திரப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.

இதனைச் சுற்றியுள்ள சுவர்களில் Fresco வகை மனதை மயக்கும் ஓவியங்கள் மீனாட்சியின் வாழ்க்கைச் சிறப்பபை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. திருக்குறள் அடிகள் சலவைக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அன்னை மீனாட்சியின் சிற்பமும், விபூதி விநாயர் சிற்பமும் தெற்குக் கரையில் உள்ளன. இக்குளத்ததின் வடக்குக் கரையில் வியாபாரி தனஞ்செயன் (லிங்கத்தைக் குளத்திற்குள் இருந்து கண்டுபிடித்தவர்), குலசேகரபாண்டியன் (கோயிலைக் கட்டிய பாண்டிய மன்னன்) ஆகியோரது ஆளுயர சிலைகள் எதிரெதிரே வடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குளத்திலிருந்து கோபுரங்களின் காட்சி மிக அழகாக இருப்பதை உணர்கிறீர்கள். பிராமணர்கள் மாலை வேலைகளில் இந்தக் குளத்தில் மந்திரங்கள் ஓதுவதும், சமஸ்கிருத வகுப்பு நடப்பதாகச் சொல்கிறார்கள். கோயிலுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கீழ்தளமும் சிமெண்ட் தளமாகிவிட்டதால் மீன்களுக்கும் இங்கே வேலையில்லை. இக்குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிறு பூங்கா இந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது.

இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்கப் புலவர்களின் புகலிடமாகவும் அவர்கள் ஆலோசனை செய்யும் தமிழ் கூடாரமாகவும் விளங்கியது. புலவர்கள் எழுதிய கவிதைகளை இந்தக் குளத்தில் மிதக்கவிட்டு, அதில் மிதந்து வரும் கவிதைகளே தரமான கவிதைகள் என்று ஏற்றதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் இறைவன் தமிழ் மீது மையல் கொண்டு புலவர்களுடன் வாதம் செய்த இடமாகவும் மீனாட்சி அம்மன் கோயிலையே குறிப்பிடுகின்றனர்.

இந்திரனின் பூலோக வருகையின் போது இந்தக் குளம் அவனுக்கு தாமரைகளைக் கொடுத்ததாக வரலாறு உள்ளது. தற்போது இந்தக் குளத்திற்குள் தாமரைகள் இல்லை. அதற்கும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் புரிந்து வந்தது. அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் அதனிடம் குறும்பு செய்தன. அந்தக் கொக்கு அதனை சட்டை செய்யவில்லை. ஆனால் அது முக்தி அடையும்போது இறைவனிடம் "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " என்று வரம் வாங்கிவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.

Comments (0)

You don't have permission to comment on this page.