GrassField

 

மதுரை அறிமுகம்

Page history last edited by Pandian R 1 yr ago

அறிமுகம்

இந்தியாவின் பழமையான நகரங்களுல் ஒன்றான மதுரையில் உள்ள மீனாக்ஷியம்மன் கோயிலைப் பற்றிய இந்தப் பக்கத்தைப் படிக்க வந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

 

தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டிவந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாக்ஷி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் இம்மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் மதுரையின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலாவினரைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய உண்டு. தூங்கா நகரமான மதுரையிலிருந்து அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், காளையார் கோயில், புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், ராமேஸ்வரம், குமுளி (தேக்கடி), கொடைக்கானல், தேனி(சுருளி), திருநெல்வேலி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உண்டு. சென்னை-நாகர்கோயில் தேசீய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கிய சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு.

 

பின்வரும் பகுதிகளில் தென்னிந்தியக் கலையில் முத்திரைப் பதிப்பான மதுரை ஸ்ரீமீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் கோயிலின் சிறப்பையும், அதன் அமைப்பையும் எடுத்துச் சொல்ல சிறு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள் இத்தளத்தினுள் உலாவி, தங்கள் கருத்தினைப் பகரவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை-ஆட்சியாளர்களின் காலவரிசை (chronology)

 

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம்தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் பிரிட்டிஷாரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை என்று நண்பர்கள் கூறுவதைக் கேட்க ஆறுதல் உண்டாகிறது.

 

தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மனனர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது. இதே போன்ற அமைப்பை புதுக்கோட்டையிலும் பார்க்கலாம்.

 

கோயிலின் தோற்றம் (புராணக்கதை)

சிவனைத் தொழும் இந்திரன்.

ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியம்

இந்திரன் ஒருமுறை ஒரு துர்தேவதையைக் கொன்றதற்கு பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது.

 

வியாபாரி தனஞ்சயன் சிற்பம்

பொற்றாமரைக்குள வடகரைச் சிற்பம்

 

மன்னவன் குலசேகரன் சிற்பம் பொற்றாமரைக்குள வடகரைச் சிற்பம்

 

ஒருமுறை மானவூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்ப வனத்தின் வழியாகச் சென்ற போது, இரவு இந்திர விமானத்தில் தங்க நேர்ந்தது. காலையில் அவன் எழுந்து பார்த்தபோது சிவலிங்கத்தை வழிபட்டதற்குரிய அடையாளங்கள் தெரிந்தது. அதனை தேவர்களின் வேலையென நினைத்த வியாபாரி மன்னன் குலசேகரபாண்டியனிடம் சென்று கூறினான். அதற்கு ஏற்றார்போல் முதல் நாள் இரவே, சிவபெருமான் பாண்டியனின் கனவில் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோயிலும், அதனை மையமாகக் கொண்டு ஒரு நகரத்தையும் நிர்மாணிக்குமாறு பணித்தார். குலசேகரனும் கட்டி முடித்தான்.

 

முதன் முதலில் குலசேகர பாண்டியனால் இந்தக்கோயில் கட்டப்பட்டது என்றாலும், அந்தக்கோயிலை மிகச்சிறப்பாக மாற்றிய பெருமை நாயக்கர்களையே சாரும். நாயக்கர்கள் மதுரையை 16முதல் 18ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். அதனால் தங்களது ராஜமுத்திரையின் பிரதிபளிப்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.

 

கோயில் அமைப்பு >>

Comments (0)

You don't have permission to comment on this page.